விருதுநகர்:சாத்தூர் தனியார் கல்லூரி பேருந்து விபத்தில் காயமடைந்த மாணவிகள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் மாணவிகளை மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வையாபுரி நேரில் சந்தித்து தெரிவித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் மத்திய அரசு திட்டங்களில் முறைகேடு நடப்பதை தவிர்க்க பாஜக சார்பாக குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என பாஜகவினர் கூறி வருவது குறித்து பேசிய அவர்,
அரசின் செயல்பாடுகளை, குறைகளை சுட்டிக்காட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் உரிமை உள்ளது. ஆனால் அதை விட்டுவிட்டு சுயாட்சியை தவிடுபொடியாக்கி ஒன்றிய அரசு மூலம் தனி ராஜாங்கம் போன்று செயல்படக்கூடாது" என்றார்.
தொடர்ந்து, அண்ணாமலை மற்றும் அர்ஜூன் சம்பத் ஆகியோரின் அறிக்கைகள் ஒரு மலிவான அரசியல் நடத்துவது போன்று உள்ளது” என்றார். பின்னர், இலங்கை அரசின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி மீனவர்கள் மற்றும் இலங்கை வடபகுதி தமிழர்கள் நலன் குறித்து தீர்க்கப்படாத பல பிரச்சனைகளை அழுத்தம் கொடுத்து மத்திய அரசு சரி செய்ய முன்வர வேண்டும்.
கடந்த கால இந்திய பிரதமர்களுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு இப்போது உள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுத்து மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களின் நீண்டகால பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.