தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாட்டுச் சாணத்தில் சோப், தைலம் தயாரிக்கும் முதுநிலை பட்டதாரி - நாட்டு மாடு சாணம்

விருதுநகர்: நாட்டு மாடு சாணத்தில் சோப், தைலம், பற்பசை, அணிகலன்களை முதுகலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ.) பட்டதாரி தயாரித்துவருகிறார்.

சங்கர்

By

Published : Nov 11, 2019, 10:51 AM IST

Updated : Nov 11, 2019, 7:38 PM IST

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலர் இயற்கை, பாரம்பரியத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். இயற்கை விவசாயம், நாட்டு மாடு, நாட்டு விதை, நாட்டுக் கோழி, நாட்டு ஆடு, நாட்டு நாய் உள்ளிட்ட நாட்டு இனங்களை மீட்டெடுக்க விரும்புகின்றனர்.

மேலும், மன திருப்தியுடன் சொந்த தொழிலில் ஈடுபட வேண்டும். அதே நேரத்தில் அந்தத் தொழில் அவர்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் லாபகரமானதாகவும் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். அதற்கு அவர்களின் தேர்வு இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்புதான். நாட்டு மாடுகளை வளர்க்க விரும்பினால் அதிலிருந்து அதிக பால் எதிர்பார்க்க முடியாது. இதனால் நாட்டு மாடு வளர்ப்பில் சில சிக்கல்கள் உள்ளன.

இந்நிலையில் நாட்டு மாட்டிலிருந்து கிடைக்கும் பொருள்களை வைத்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை தயாரித்துவருகிறார் விருதுநகரைச் சேர்ந்த சங்கர் என்ற முதுகலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ.) பட்டதாரி.

இது தொடர்பாக சங்கர் கூறும்போது, "மாடு என்றாலே பாலுக்குதான் என்ற நிலை வந்துவிட்டது. இன்று பாலுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. எங்கள் வீட்டிலும் பல ஆண்டுகளாக மாடு வளர்த்துவந்தோம். எனவே, சிறுவயதிலfருந்தே எனக்கு கால்நடை வளர்ப்பில் ஆர்வம் இருந்தது. ஆரம்பத்தில் நாங்களும் பாலுக்காகதான் மாடு வளர்த்தோம். அதிக பால் வேண்டும் என்பதற்காக ஜெர்சி ரக மாடுகளையும் வளர்த்துவந்தோம்.

நான் எம்.பி.ஏ. முடித்து தனியார் நிறுவனங்களில் 10 ஆண்டு வேலை பார்த்தேன். ஆனால் அதில் முழு மனதிருப்தி ஏற்படவில்லை. எனவே, பணியிலிருந்து விலகி நாட்டு மாடுகளை வளர்க்க விரும்பினேன். நாட்டு மாடுகள் சம்பந்தமாக நிறைய புத்தகங்கள், கட்டுரைகளைப் படித்தேன். பின்னர் அதனை மட்டுமே வளர்க்கத் தொடங்கினேன்.

நாட்டு மாட்டிலிருந்து கிடைக்கும் பஞ்சகவ்யத்தைக் கொண்டு என்னென்ன மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயார் செய்கிறார்கள்? எப்படி தயாரிக்கிறார்கள் என்பதை பல இடங்களுக்குச் சென்று பார்த்துவந்தேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு நாட்டு இனம் உண்டு. அது அந்த மாநிலத்தின் அடையாளமாகவும் உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நாட்டு இனம் உண்டு. இவற்றை வளர்ப்பதால் அதிக பால் எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும் நாட்டு இனங்களைக் காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் தற்சார்புடன் இருக்க முடியும். குறைவான பால் மட்டுமே தரும் நாட்டு மாட்டை கொண்டு எப்படி லாபகரமாக செயல்பட முடியும் என நினைத்தேன்.

எம்.பி.ஏ. பட்டதாரி சங்கர்

இதற்காக நாக்பூரில் உள்ள பயிற்சி மையத்திலிருந்து பஞ்சகவ்யத்தில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி பெற்றுவருகிறேன். கடந்த ஆறு ஆண்டாக நாட்டு மாடுகளை வளர்த்துவருகிறோம். தற்போது கன்றுகள் எல்லாம் சேர்ந்து எங்களிடம் 20 நாட்டு மாடுகள் உள்ளன. வீட்டுத் தேவைக்காக மட்டும்தான் பால் கறப்போம்.

பஞ்சகவ்யத்திலிருந்து சோப்பு, பற்பொடி, தைலம், காதணி, பினாயில், மருந்து பொருளான அர்க் போன்றவற்றை தயாரிக்கிறோம். அவைகளை இயற்கை அங்காடிகள், சென்னை, பெங்களூரு போன்ற ஊர்களுக்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்துவருகிறேன். இன்னும் பல பொருள்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம்.

இவற்றை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கோ நம் உடலுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது. கீழே எறிந்தாலும் மண்ணுக்கு உரமாகிவிடும். பஞ்சகவ்யத்தில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருல்கள் தயாரிப்பு குறித்து பலருக்கும் பயிற்சியளித்துவருகிறேன். நாட்டு மாடுகள் வேண்டும் என கேட்பவர்களுக்கு வாங்கியும் தருகிறேன்.

பொலிகாளை இருந்தால்தான் நிறைய நாட்டு இன கன்றுகளை உருவாக்க முடியும். ஒரு பொலிகாளை என்பது நூற்றுக்கணக்கான நாட்டு மாடுகள் இருப்பதற்குச் சமம். எனவே, ஒரு பொலிகாளையை வளர்த்துவருகிறோம்" என்றார்.

தற்போதைய சூழலில் இது மாதிரியான இயற்கை மீதான ஆர்வமும் கால்நடை வளர்ப்பின் மீதான ஈர்ப்பும் பல பட்டதாரி இளைஞர்களை தொழில்முனைவோர்களாக மாற்றிவருகிறது. எனவே இவர்களுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சட்டங்களை இயற்றி சலுகைகள் வழங்கி இவர்களை கௌரவிக்க வேண்டும் என்பதே பட்டதாரி இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Last Updated : Nov 11, 2019, 7:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details