’என் பெற்றோர் பட்டாசு தொழிலாளி, இப்ப அவங்களுக்கு வேலை இல்லை’ என பேசத் தொடங்கும் நவீனுக்கு சமூகத்தின் மீதும், குடும்பத்தின் மீதும் அப்படியொரு அக்கறை. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வேலைவாய்ப்பை இழந்தவர்களில் நவீனின் பெற்றோரும் அடங்குவர்.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலை நம்பியே 8 லட்சத்திற்கும் அதிகமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பிழைத்து வருகின்றனர். தற்போது அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், பட்டாசு உற்பத்தியில் பல்வேறு தொழிலாளர்கள் ஈடுபட முடிவதில்லை.
இதனால், சொற்ப வருமானத்தை ஈட்டி வந்த நவீனின் பெற்றோர் மொத்த வருமானத்தை இழந்தனர். ஆகையால், வீட்டுச் செலவுகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுவந்தது. இது தான் நவீனை முகக்கவசங்களை விற்க உந்தி தள்ளியது. அவரிடம் பேசினோம்.
“காலையில் 9 மணிக்கே முகக்கவசங்கள் விற்க வந்துவிடுவேன். நானும் என் அண்ணனும் சைக்கிளில் வருவோம். ரொம்ப லாபம் வைத்து முகக்கவசங்களை விற்கமாட்டோம். மாசடைந்த காற்று, புகை போன்றவற்றிலிருந்து காக்கும் முகக்கவசங்களை எப்போதும் பயன்படுத்தலாம். இப்போது கரோனா காலத்தில் அது மிகவும் உதவியாக உள்ளது. எனவே, ரூ.18க்கு வாங்கும் முகக்கவசத்தை வெறும் ரூ.2 லாபம் வைத்து விற்றுவருகிறோம். இந்த காசை குடும்பச் செலவுக்கு பயன்படுத்த எங்களது அம்மாவிடம் கொடுத்துவிடுவோம்” என்றார்.