விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் அருண் குமார் (26). இவர் அதே ஊரைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற கல்லூரி மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.
அந்தப் பெண் இவருடைய காதலை ஏற்க மறுத்ததை அடுத்து கடந்த ஓராண்டிற்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதையடுத்து இரண்டு ஊர் நாட்டாமைகள் சேர்ந்து ஊர் பெரியோர் முன்னிலையில் பேசி இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது என்று எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் அந்தப் பெண் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரிக்கு வழக்கம்போல் பேருந்தில் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அருண்குமார் வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதையடுத்து வீட்டில் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ய முடியாது என்று அப்பெண் பதிலாகக் கூறியுள்ளார்.
இதனால் அருண்குமார் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் தண்ணீர் கொண்டு தீயை அணைத்து இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவைத்தனர். அங்கு அருண்குமாருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்நது அருண்குமார் மேல்சிகிச்சைக்காக சிவகாசியில் உள்ள தீவிர தீக்காய சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உடலில் 60 விழுக்காடு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தச் சம்பவம் குறித்து சேத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மத்தியக் குற்றப்பிரிவு முன் நேரில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!