விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, சாத்தூர், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சிவகாசி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 200 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் நடந்தன. இதையடுத்து, ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வெற்றிபெற்றோர் விவரம் அறிவிக்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து, ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் கடந்த 11ஆம் தேதி நடத்தப்பட்டது. அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, விருதுநகர், வெம்பக்கோட்டை ஆகிய ஒன்றியங்களில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.
இதில், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி ஒன்றியங்களை திமுகவும், விருதுநகர், வெம்பக்கோட்டை ஒன்றியங்களை அதிமுகவும் கைப்பற்றின. மேலும், தேர்தலின்போது ஏற்பட்ட கலவரத்தில் டிஎஸ்பி கையில் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக நரிக்குடியிலும், கலவரம், சட்டம்-ஒழுங்கு பிரச்னை காரணமாக சாத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் ஆகிய ஒன்றியங்களில் தேர்தல் நிறுத்தப்பட்டது.