விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சத்திரப்பட்டி, தளவாய்புரம், முகவூர், சொக்கநாதன்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 150 பேண்ட்செட் இசைக்குழுவினர் இருந்து வருகின்றனர். இதில் குழுவிற்கு 10 பேர் வீதம், கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தொழிலை நம்பியுள்ளனர்.
தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக சுபநிகழ்ச்சிகள் மற்றும் கோயில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால், இதனை நம்பியுள்ள இசைக் கலைஞர்கள் வேலையின்றி,வாழ்வாதாரம் இழந்து வறுமை நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீமாயூரநாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட பேண்ட்செட் இசைக்கலைஞர்கள் இசைக்கருவிகளை இசைத்து, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அதில், தங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும், இத்தொழிலையே நம்பி தங்கள் குடும்பம் உள்ளது எனவும், தற்போது தங்கள் குடும்பத்தினர் பசி பட்டினியுடன் வாழ்வதால், தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்கி, தங்கள் குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க:கரோனா ஊரடங்கால் வாழ்விழந்த சுற்றுலா வழிகாட்டிகள்! வாழ்விற்கு வழிகாட்டுமா அரசு?