விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இதன் எதிரே மகப்பேறு மருத்துவ சிகிச்சைப் பிரிவும் இயங்கி வருகிறது.
மூன்று மாடி கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த சிகிச்சைப் பிரிவில் 90க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள், பிரசவித்த தாய்மார்கள் சிகிச்சைபெற்று வருகின்றனர். சிசேரியனும் இங்கு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரசவம் பார்த்த இரண்டு பெண் மருத்துவர்கள், நான்கு செவிலியர்கள், எட்டு கர்ப்பிணிகள் உள்ளிட்ட 14 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனை இன்று திடீரென மூடப்பட்டது. ஏற்கனவே கடந்த ஒருவார காலமாக விருதுநகர் அரசு மருத்துவமனையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் வேலை நடைபெற்று வருவதால் இங்கு வெளிநோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க முடியாத சூழல் இருந்து வந்தது.
தற்போது மகப்பேறு சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டதன் காரணமாக சில தினங்களுக்கு முன் பிரசவம் பார்க்கப்பட்ட குழந்தைகளும், தாய்மார்களும் இருப்பிடத்திற்கு அருகாமையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர்களுக்கான மருத்துவ சிகிச்சை தொடரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவத்துறை அலுவலர்கள் கூறுகையில், பெண் மருத்துவர்கள், செவிலியர்கள், பிரசவித்த பெண்களுக்கு கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மேலும், பலருக்கு இந்த வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக மகப்பேறு சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்படுகிறது. தற்போது சிகிச்சையில் உள்ள தாய்மார்கள் சிகிச்சை முடிந்த பின் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
அதைத்தொடர்ந்து, மகப்பேறு சிகிச்சைப் பிரிவு, மருத்துவமனையின் அனைத்து பகுதிகளும் கிருமிநாசினி மூலம் முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கின்றனர்.