இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு இருந்த மெட்ராஸ் மாகாணத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி பேசுபவர்கள் இருந்தனர்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும், மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரலிங்கனார் 1956ஆம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
தனது கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்த அவர், 1956ஆம் ஆண்டு அக்டோபர் 13ல் உடல்நிலை மோசமடைந்து மரணத்தை தழுவினார்.
இதனிடையே, காமராஜர், ராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்கள் பலர் வலியுறுத்தியும் அவர் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை. கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.
அவர் மறைவிற்குப் பின்பு தமிழ்நாட்டில் இருந்த கட்சிகள் தமிழ்நாடு பெயர் மாற்றக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்தன. அப்போராட்டத்திற்கு அடித்தளமிட்டவர் தியாகி சங்கரலிங்கனார் என்றால் மிகையாகாது.
சட்டப்பேரவையிலும், மக்களவையிலும் இக்கோரிக்கை பலமாக எதிரொலித்ததன் விளைவாக 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 1968 நவம்பர் 23ஆம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
நாடார் மகாஜன சங்கத் தலைவர் கரிக்கோல் ராஜ் பேட்டி தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த சங்கரலிங்கனாரின் நினைவு நாளான இன்று அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், வணிகர்கள் விருதுநகரில் சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சங்கரலிங்கனாரின் திருவுருவச்சிலைக்கு அஞசலி செலுத்திய பின்னர் பேசிய நாடார் மகாஜன சங்கத்தின் தலைவர் கரிக்கோல் ராஜ், “தமிழ்நாட்டில் உள்ள பெரிய அரசியல் கட்சிகளைச் சார்ந்தோர் சங்கரலிங்கனாரின் பிறந்தநாளுக்கும், நினைவுநாளுக்கும் இங்கு வந்து மரியாதை செய்யவேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக உயிரைவிட்ட சங்கரலிங்கனாரின் நினைவு தினம்