விருதுநகர் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிவருபவர் பிரிதிவிராஜ். இவர், கிராம நிர்வாக அலுவலராக சிறப்பாக பணியாற்றுவது மட்டுமல்லாமல், சமூகத்திற்காக பல்வேறு சேவைகளையும் தனது நண்பர்களுடன் இணைந்து செய்து வருகிறார்.
குறிப்பாக, குருதிக்கொடை, ஏழை மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவது, ஆதரவற்ற மனநல வளர்ச்சிக் குறைந்த குழந்தைகளை வளர்ப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறார். வாகன விபத்தில் இறந்த தனது தம்பியின் நினைவாக அவசர ஊர்தியை எந்த ஒரு கட்டணமும் வசூலிக்காமல் தன்னார்வலர்களின் உதவியோடு இயக்கிவருகிறார்.
தனது ஊதியத்தின் ஒரு பகுதியை இதற்காகவே சேமித்து முதலில் சிறிய அளவில் தொடங்கிய இச்சேவை, சமூகவலைதள நண்பர்களின் உதவியோடு தற்போது பெரியளவில் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சமூகவலைதள நண்பர்களின் உதவியோடு கலாம் என்ற ஓர் இல்லத்தை தொடங்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையிலுள்ள பள்ளி மாணவர்களைக் கண்டறிந்து பள்ளிக்கட்டணம் செலுத்தி வருகிறார். கடந்த கல்வியாண்டில் இவர் மூலம் 69 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இத்தனை சேவைகளைச் செய்துவரும் இவர், தனது கிராம நிர்வாக அலுவலர் பணியையும் சிறப்பாகவே செய்துவருகிறார்.