விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்சியர் சிவஞானம், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.
'தண்ணீர் திருடினால் அபராதம்!' - சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி - தண்ணீர்
விருதுநகர்: மின் மோட்டரை பயன்படுத்தி முறைகேடாக தண்ணீரை திருடும் வீடுகளின் குடிநீர் இணைப்பை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் ராஜேந்திர பாலஜி கூறியதாவது, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சில பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலக உதவியாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் போல் செயல்பட்டுவருகின்றனர். இவர்கள் தங்களது பணியை சரியாக செய்வதில்லை. இவர்கள் குடிநீர் பஞ்சம் என கூறி அரசு மீது பழி சுமத்துக்கின்றனர்.
முறைகேடாக மின் மோட்டரை பயன்படுத்தி சில வீடுகளில் தண்ணீரை திருடுகின்றனர். இவ்வாறு செய்வதால் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் முறையாக கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் திருடும் வீடுகளைக் கண்டறிந்து அவர்களுக்கு குடிநீர் இணைப்பை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் இணைப்பு வழங்க 15 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வேண்டும். இது போன்ற கடுமையான நடவடிக்கையை அலுவலர்கள் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.