விருதுநகர்: கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. இவர் தற்போது, அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.
இந்நிலையில், தனது உறவினருக்கு ஆவின் நிறுவனத்தில் கிளை மேலாளராக வேலை வாங்கித் தருவதாக ரூ. 30 லட்சம் வாங்கியதாக அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி, ராஜேந்திர பாலாஜி, மாரியப்பன் ஆகிய மூவர் மீதும் சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் மாவட்ட குற்றப்பிரிவில் புகாரளித்தார்.
இதுதொடர்பாக, ராஜேந்திர பாலாஜி உள்பட மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி புகார் ஒன்றை அளித்தார். அதில், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது உதவியாளர் மூலம் ரூ. 1.06 கோடி பெற்றுக் கொண்டதாக ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், முத்துப்பாண்டி ஆகியோர் மீது மாவட்ட குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தன் மீது மேல் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கக்கோரியும், முன் ஜாமீன் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை, கடந்த நவம்பர் 17ஆம் தேதி சென்னை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. இதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் மனோகரன் உத்தரவின்பேரில் எட்டு தனிப்படை காவல் துறையினர், ராஜேந்திர பாலாஜியை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று (ஜனவரி 5) கர்நாடகாவில் ஹசன் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.