சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 500, 1000 ரூபாய் செல்லாது என மோடி அரசு அறிவித்தது. அதற்குப்பின்பு இந்தியாவின் நகரங்களில் பணமில்லா பரிவர்த்தனைகள் அதிகரிக்கத்தொடங்கின. டிஜிட்டல் யுகத்தில் செல்போன் மூலம் பணமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்வது எளிதாக இருப்பதால், படித்த பிரிவினர் இதனை அதிகம் மேற்கொண்டனர்.
இந்தச்சூழ்நிலையில், விருதுநகர் மாவட்டத்தை இந்திய ஒன்றிய அரசு ரொக்கம் இல்லா பணப் பரிவர்த்தனை செய்யும் மாவட்டமாக தேர்வு செய்து அறிவித்துள்ளது. இத்திட்டத்தை வெற்றி பெற செய்ய மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
முதல் பணமில்லா பரிவர்த்தனை மாவட்டம் திட்டத்தைச் செயல்படுத்திய விருதுநகர் இதுதொடர்பாக ஆட்சியர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்து வியாபாரிகள், சிறு, குறு மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பணமில்லா பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையில் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், கியூ ஆர். கோர்டு உள்ளிட்டவைகள் முலமும் கூகுள் பே போன்ற செயலிகள் மூலமும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுகிறது.
டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாகவும், எளிமையாகவும் விரைவாகவும், பிறர் உதவியின்றியும், பிழைகள் இன்றியும் மேற்கொள்ளலாம். இதன்மூலம் காலவிரையம் தவிர்க்கப்படுவதுடன் பணத்தை கையாளுவதில் ஏற்படும் நோய்த்தொற்றுகளையும் தவிர்க்க முடியும். இதன்மூலம் கணக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டு கருப்பு பணம் ஒழிய ஏதுவாக அமையும். இது நமது தேசிய வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால் அருகிலுள்ள வங்கியை அணுகி பயன்பெறலாம் எனவும் அந்த அறிக்கையில் ஆட்சியர் கூறியுள்ளார்.இந்த பணமில்லாப் பரிவர்த்தனைகள் பயனுள்ளதாக இருப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இளம் தொழில் முனைவரான இப்ராஹீம் ஷா இதுகுறித்துப் பேசும்போது, பணப்பரிவர்த்தனைகளை பிரதானமாக இருந்துவந்த நிலையில், தற்போது வந்துள்ள பணமில்லா பரிவர்த்தனை திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் சில நேரங்களில் பணத்தை மறந்து வீட்டில் வைத்துவிட்டு வந்தால்கூட செல்போன் மூலம் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை க்யூ. ஆர். கோர்டு பயன்படுத்தி எளிமையாக பொருட்களை வாங்கிச் செல்லமுடியும். இந்தமுறை மிகவும் பயனுள்ளதாககவும், குறிப்பாக கரோனா நோய்த்தொற்று காலத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் வியாபாரம் செய்யமுடிகிறது" என்றார்.
"பண்டிகை காலங்களில் அதிகளவில் வரக்கூடிய கூட்டநெரிசல் காரணமாக தற்போதைய சூழலில் நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம் இருந்து வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக பணமில்லா பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானதாகவும் நேர விரயத்தை குறைப்பதாகவும் இருந்து வருகிறது" என்கிறார் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரியும் முருகேஸ்வரி.
பல்வேறு பயன்கள், பாதுகாப்பு அம்சங்கள் இருப்பினும், அவ்வப்போது, பணமில்லாப் பரிவர்த்தனைகளில் சில மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. எனவே, பொதுமக்களும் வியாபாரிகளும் இந்தப்பணமில்லா பரிவர்த்தனை குறித்து நல்ல புரிதலை ஏற்படுத்திக்கொண்டு பாதுகாப்பான முறையில் மேற்கொண்டால் இது பயனளிக்கும் என்பது அனைவரின் எண்ணம்.
இதையும் படிங்க:“படிச்சு நல்ல நிலைக்கு வந்துட்டா, ஊரும், உலகமும் சாதி பார்க்காம மதிக்கும்”- மருத்துவர் இலக்கியா