விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர், வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாக சுழற்சி முறையில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டுவந்தது.
மழையின்மை, வறட்சி காரணமாக நகர் பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்கள் காலிக்குடங்களுடன் தண்ணீருக்காக வீதி வீதியாக அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் 8, 11 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன.
இந்தப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. தினமும் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இது குறித்து நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அந்தப் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சொக்கலிங்கபுரம், திருச்சுழி சாலையில் நேற்று காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
தண்ணீர் பஞ்சம்; சாலையில் குடங்களுடன் பெண்கள் மறியல்
தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து அருப்புக்கோட்டை காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த, பின்னரே மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் திருச்சுழி சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.