விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசு 60 விழுக்காடு பங்களிப்பு, மாநில அரசு 40 விழுக்காடு பங்களிப்புடன் 390 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவக் கல்லூரியை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி முன்னிலையில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில், மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
இந்த ஆய்வில் புதிய மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள பதனிடல் அறை, பதப்படுத்திய பிரேத அறை, உடற்கூராய்வகம் உள்ளிட்ட கட்டடங்களைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளரைச் சந்தித்த மா. சுப்பிரமணியன், “இந்தியாவிலேயே 69 தனியார், அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான்.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தமிழ்நாட்டில் படிக்கும் அளவுக்கு கட்டமைப்பு உள்ளது. இந்தியாவில் அதிக மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் இருப்பது தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் எட்டு மருத்துவர்களில் கண்டிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் இருப்பார்.
இதற்காக 2006ஆம் ஆண்டு அடித்தளத்தை அமைத்தவர் கருணாநிதி. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரியைக் கொண்டுவர திட்டம் வகுத்தவர் அவர். தமிழ்நாட்டில் தற்போது கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் ஆயிரத்து 450 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டுவருகிறது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “11 மருத்துவக் கல்லூரிகளில் விருதுநகர் கல்லூரி 100 விழுக்காடு பணி நிறைவுபெற்றுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத காரணத்தினாலும் வரும் ஜனவரி 2ஆம் வாரம் பிரதமர், முதலமைச்சர் ஆகியோர் மருத்துவக் கல்லூரிகளை இங்கிருந்து திறந்துவைக்கவுள்ளனர்.
ஒமைக்ரான் தொற்று பாதுகாப்பு நடவடிக்கை