விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மூக்கையா (33). இவர் சங்கரலிங்கபுரம் ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். அதே விடுதியில் வெம்பக்கோட்டையை சேர்ந்த பரமலிங்கம் என்பவரும் சமையலராக பணி புரிந்து வருகிறார். மூக்கையா பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்.
இந்நிலையில், பரமலிங்கம் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியரான மூக்கையாவை பட்டியல் இனத்தின் பெயரைச் சொல்லி திட்டியதாகவும், உன் சமூகத்தை சேர்ந்தவர்கள் சமையல் பணி செய்யக்கூடாது துப்பரவு பணி மட்டுமே செய்ய வேண்டும் எனக் கூறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்கவில்லை.
இதனால், மனமுடைந்த மூக்கையா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தீடீரென்று பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அருகில் இருந்த காவலர்கள் பெட்ரோல் பாட்டிலை பறிக்க முயன்ற போது காவலர்களிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.