இன்று அதிகாலை, மதுரையில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சின்னக்கடை பஜார் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள், மறைந்திருந்து பேருந்து மீது சரமாரியாக கல் வீசித் தாக்கினர்.
இதில், பேருந்தின் பின்பக்கக் கண்ணாடி உடைந்தது. அதேபோல், இன்று அதிகாலையில் குமுளியிலிருந்து திருநெல்வேலி செல்லும் அரசுப் பேருந்து, இந்திராநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் பேருந்தின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தினர்.
அதில், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. இதனால், பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் ராஜா என்பவர் படுகாயமடைந்தார். இதைக் கண்ட பின்னால் வந்த வாகன ஓட்டிகள், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, விரைந்து வந்து ஓட்டுநர் ராஜாவை மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.