விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அடுத்த அன்பு நகரைச் சேர்ந்தவர் நாகநாதன். திமுக மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரான இவர் பழைய இருசக்கர வாகனம் வாங்கி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நாகநாதன் தனது மனைவியுடன் உறவினர் வீட்டிற்குச் சென்றார்.
இதனிடையே அவரது மகள் அவ்வழியாக சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நாகநாதன் வீட்டிலிருந்து வெளியே வந்தார். பின்னர் அவர் இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொறு நபருடன் அங்கிருந்து சென்றார். இதைப் பார்த்த அவரது மகள் தந்தைக்கு தகவல் கொடுத்தார்.
திமுக பிரமுகர் வீட்டில் திருட்டு உடனே தனது வீட்டிற்கு வந்த நாகநாதனுக்கு, பீரோவிலிருந்த 70 சவரன் தங்கநகை, ரூ. 1.40 லட்சம் பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை காவல் துறையினர் மோப்பநாய் உதவியுடன் வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து சிசிடிவியில் பதிவான காட்சியை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அருப்புக்கோட்டையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காயிதேமில்லத் தெரு மற்றும் அஜீஸ்நகர் உட்பட ஐந்து இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: நகைக்கடையில் கொள்ளை முயற்சி : காவல்துறை விசாரணை