விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள பேராசிரியை நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இந்த வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே சிபிசிஐடி காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், இன்று நீதிபதி பரிமளா குற்றச்சாட்டு வனைவு பதிவு செய்து (CHARGE FRAME ), கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றது, அவர்களை தவறான பாதைக்கு வழி நடத்த கூட்டு சதி செய்தது உட்பட 8 பிரிவுகளின் கீழ் உள்ள குற்றச்சாட்டை மூன்று பேரும் செய்தது உண்மையா" என கேள்வி எழுப்பினார்.
இதற்கு மூன்று பேரும் தாங்கள் இந்தக் குற்றச்சாட்டை செய்யவில்லை என்றும், இவை பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு எனவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து பதில் அளித்த நிர்மலா தேவி, 'நான் மாணவிகளை குழந்தையாக பார்த்து வருகிறேன். அவ்வாறு எந்த தவறும் செய்யவில்லை' என நீதிபதியிடம் தெரிவித்தார். இதன் பின்னர் நிர்மலா தேவி, முருகன், மாணவர் கருப்பசாமி ஆகிய மூன்று பேரும் வருகின்ற 23ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டு நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.