விருதுநகர் மாவட்டத்தில், கரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத்தொற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் விதமாக மாவட்டத்தில், ஏற்கெனவே தொற்றுப் பாதிப்பு அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்ட பகுதிகளான மாவட்டம் முழுவதும் உள்ள 57 இடங்களில் வருகிற 12-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில், தடை செய்யப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது எனவும்; அத்தியாவசியக் கடைகள் தவிர, மற்ற வணிகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் இதுவரை 1,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 943 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 784 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.