தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே கமுதி - திருச்சுழி சாலையில், அபிராமம் சந்திப்பில் வீரசோழன் காவல் சார்பு ஆய்வாளர் முத்துப் பாண்டி தலைமையிலான காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக திருச்சுழி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், காவல் துறையினரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்த காவல் துறையினர், அவர்களிடம் சோதனை நடத்தியதில் உலோகத்திலான சிறிய அம்மன் சிலை ஒன்று இருந்தது தெரியவந்தது.
சந்தேகத்தின் அடிப்படையில் இருவரையும், சிலையோடு நரிக்குடி காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருவரும் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் பழனிசாமி, கூறிப்பாண்டி என்பது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட அம்மன் சிலை ஐம்பொன் சிலை, இதே போல் மேலும் 3 சிலைகள் மினாக்குளத்தைச் சேர்ந்தப் பூசாரியான சின்னையா என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். பிடிப்பட்டவர்கள் அளித்தத் தகவலின்படி, நரிக்குடி காவல் துறையினர் மினாக்குளம் சென்று, சின்னையாவின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி, அங்கு சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தப் புத்தர் சிலை, விநாயகர் சிலை மற்றும் பெரிய அம்மன் சிலை என, மூன்று சிலைகளை மீட்டனர்.
சிலைகளை பதுக்கியதாக சின்னையா, பழனி முருகன் என்ற மேலும் இருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். சிலைகள் அனைத்தும் ஐம்பொன் சிலைகள், தற்போது ஊரடங்கு காரணமாகச் செலவிற்குப் பணமில்லாததால் ஏதேனும் நகைப் பட்டறையில் சிலையை விற்க முடியுமா? என, திருச்சுழிக்குக் கொண்டு செல்ல முயன்றதாக, பிடிப்பட்டவர்கள் அனைவரும் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்த நரிக்குடி காவல் துறையினர், ஏதேனும் கோயிலில் சிலைகளை திருடினார்களா? இல்லை வெளிநாடுகளுக்கு விற்பதற்காக கடத்தி கொண்டு வரப்பட்ட சிலைகளா? என்பன போன்ற கோணங்களில், தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மின் கட்டணம் செலுத்த மேலும் அவகாசம்