விருதுநகர்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகரில் அவரது திரு உருவசிலைக்கு முன்னாள் அமைச்சர் மாஃபாபாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எம்ஜிஆர் பிறந்த நாளில் தொண்டர்கள் மிகுந்த எழுச்சியுடன் வந்து எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். தொண்டர்கள் எழுச்சியை பார்க்கும்போது வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என உறுதியாக இருக்கிறேன்.
ஊழல்
பொங்கல் பரிசு வழங்குவதில் திமுக அரசு மிகப் பெரிய சொதப்பல் செய்துள்ளது. பொங்கல் பரிசு வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவோம் என கூறிவிட்டு தற்போது எதுவும் வழங்காதது மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் எந்த தொகுதியிலும் திமுக வெற்றி பெறாது.
விவசாயிகள் மீது தடியடி
ஜல்லிக்கட்டில் தடுப்புகள் கூட முறையாக வைக்கவில்லை. விவசாயிகள் மீது தடியடி நடத்தப்படுவது மிகப்பெரிய கொடுமை. ஜல்லிக்கட்டு விதிமுறைகளை முறையாக பின்பற்றியது அதிமுக அரசு ஆனால் இந்த நிகழ்ச்சி சரியாக நடக்கக்கூடாது. இளைஞர்கள் உயிர் பறி போகவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.