விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இக்குழுவினர் விபத்து நடந்த பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம்(பிப்.25) ஆய்வு மேற்கொண்டனர். அதை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன் அப்போது அவர், பட்டாசு ஆலை வெடி விபத்துக்கு காரணம் விதிமீறல்கள் என்பது தெளிவாக தெரிகிறது. உரிமம் பெற்ற நபர் சட்ட விரோதமாக மற்ற நபர்களுக்கு பட்டாசு ஆலையை குத்தகைக்கு விடுவதால் அதிக விபத்துகள் நடக்கின்றன. பாதுகாப்பின்மை, கவனக்குறைவு, போதிய தொழில் பயிற்சி இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் விபத்து ஏற்படுகிறது.
பட்டாசு ஆலைகளில் அலுவலர்கள் ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும். அதற்காக கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். பட்டாசு ஆலையில் ஏற்படும் விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணம் போதுமானதாக இல்லை. அவர்களது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும், யார் வழங்க வேண்டும் என்பதை முறைப்படுத்த வேண்டும்.
எங்கள் குழு தாக்கல் செய்யும் அறிக்கையில், பட்டாசு விபத்துக்களை தடுப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். பேரியம் பயன்படுத்தி பட்டாசு தயாரிக்க கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் பேரியம் விற்க தடை ஏதும் இல்லை. சல்பர் மட்டுமே கட்டுப்பாடுகளுடன் பட்டாசு ஆலைகளுக்கு வழங்கப்படுகிறது.
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்காணிப்பது மற்றும் விபத்துக்களை தடுப்பது குறித்தும், பட்டாசு தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அளவிலும் பரிந்துரைகள் இருக்கிறது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து - தேசிய பசுமை தீா்ப்பாயம் அமைத்த குழு ஆய்வு!