இந்தியாவின் கிங் மேக்கராக திகழ்ந்த காமராஜரின் 118ஆவது பிறந்தநாள் இன்று. தமிழ்நாட்டில் சிறந்த தலைவருடைய ஆட்சி என கேட்டால் அனைவரது மனதும் ஒருவரைத்தான் நினைக்கும். இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதமர்களை உருவாக்கிய பெருந்தலைவர் காமராஜரை தான். தமிழ்நாட்டை, இவர் தொடர்ந்து ஆண்ட ஒன்பதாண்டு காலம் பொற்காலம் என்றே கூறலாம்.
தேசப்பற்று, விடுதலைப் போராட்டம்
தனது சிறுவயதிலேயே தந்தையை இழந்த காமராஜர், படிப்பைத் தொடர முடியாமல் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போதே விருதுநகர் தேசபந்து மைதானத்தில் விடுதலைப் போராட்ட வீரர்கள் நடத்திய உரையைக் கேட்டு தேசப்பற்றைப் பெற்றார்.
பின்நாட்களில் டாக்டர். வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார், ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்ட காமராஜர், சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்திய தேசிய காங்கிரஸில் முழு நேரத் தொண்டனாக தனது 16ஆவது வயதில் இணைத்துக்கொண்டார்.
உப்பு சத்தியாகிரகத்தின் ஒரு பகுதியாக, 1930ஆம் ஆண்டு, சி.ராஜ கோபாலாச்சாரி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கி நடந்த திரளணியில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஆண்டே, காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
நேருவின் மகள் இந்திராவுடன் காமராஜ் மேலும், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம், நாக்பூர் கொடி சத்தியாகிரகம் போன்றவற்றில் பங்கேற்ற காமராஜர், சென்னையில், வாள் சத்தியாகிரகத்தைத் தொடங்கி, நீல் சிலை சத்தியாகிரகத்திற்குத் தலைமைத் தாங்கினார். மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று அவர், ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார். காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சீரியத் திட்டங்கள்
காங்கிரஸ் தலைவர், இந்திய விடுதலை வீரர், இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகளை ஆழமாக வேரூன்ற செய்தவர், மிகச் சிறந்த பேச்சாளர் எனப் புகழப்பட்ட சத்தியமூர்த்தியை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார். 1936ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக சத்தியமூர்த்தி பொறுப்பேற்ற போது, காமராஜரை செயலாளராக நியமித்தார்.
இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, சத்திய மூர்த்தி இறந்துவிட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் சத்திய மூர்த்தி வீட்டிற்குச் சென்ற காமராஜர், அங்கு தேசியக்கொடியை ஏற்றினார். அதுமட்டுமல்லாமல், காமராஜர் தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன், சத்திய மூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி, தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.
காமராஜர் அறிமுகப்படுத்திய மதிய உணவுத் திட்டம் 1953ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜியின் செல்வாக்கு குறைந்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி உள்ளேயும் மதிப்புக் குறைந்தது. இதனால், ராஜாஜி பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். ஆனால், கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் காமராஜருக்குப் பெருவாரியான வாக்குகளைப் அளித்ததால், 1953ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றகாமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும் வியக்கும் படியும் அமைத்தார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி. சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவச்சலத்தையும் அமைச்சராக்கினார். முதலமைச்சரான பின்பு, தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6 ஆயிரம் பள்ளிகளைத் திறந்தார். மேலும், 17ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்ததோடு மட்டுமல்லாமல், பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்தத் திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது. இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 விழுக்காடாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 விழுக்காடாக உயர்ந்தது.
தொழில்வளத்தில் இரண்டாம் இடம் பெற்ற தமிழ்நாடு
காமராஜர் கல்வித் துறையில் மட்டுமல்லாமல், தொழில்துறைத் திட்டங்கள், நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.
நெய்வேலி நிலக்கரித் திட்டம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ், கல்பாக்கம் அணு மின்நிலையம், ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை, கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை, மேட்டூர் காகித தொழிற்சாலை, சேலம் இரும்பு உருக்கு ஆலை, பாரத மிகு மின் நிறுவனம், ரயில் பெட்டித் தொழிற்சாலை, நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை எனப் பல்வேறு தொழிற்சாலைகள் காமராஜரால் நிறுவப்பட்டவை.
தமிழ்நாட்டில் இருக்கும் மிக முக்கிய அணைகளில் மேட்டூர் அணை(1934), பாபநாச அணை(1944) ஆகியவை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை. இவற்றைத் தவிர, கீழ் பவானி, காவிரி டெல்டா, ஆரணியாறு, வைகை நீர்த்தேக்கம், அமராவதி அணை, சாத்தனூர் அணை, பரம்பிக்குளம், நொய்யாறு ஆரணியாறு, கிருஷ்ணகிரி ஆழியாறு, வீடூர் போன்ற அணைகள் காமராஜரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவையே.
மேலும், அவரது காலக்கட்டத்தில் பல நீர் மின் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்பாக 1955ஆம் ஆண்டில் காமராஜரால் கேரள மலம்புழாவில் கட்டப்பட்ட அணையால் பாலக்காடு சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.
60 ஆண்டுகளாக கம்பீரமாக நிற்கும் இந்த அணைகளால் தமிழ்நாட்டின் பல பகுதிகளின் குடிநீர், விவசாயத் தேவை பூர்த்தியாகிறது. இவரது ஆட்சியின் இறுதியில், தமிழ்நாடு தொழில் வளத்தில் வடநாட்டு மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
கே- பிளான்
மூன்று முறை முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட காமராஜர், பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியுமே முக்கியம் என கருதி கே-ப்ளான் (K-PLAN) எனப்படும் காமராஜர் திட்டத்தினை கொண்டுவந்தார். அதன்படி, கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பது இதன் நோக்கமாகும்.
அதன் பேரில் அக்டோபர் 2, 1963ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் துறந்த காமராஜர், அந்த பொறுப்பினை பக்தவச்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு, டெல்லிக்குச் சென்றார். பிறகு, அதே ஆண்டில் அக்டோபர் 9ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இத்திட்டத்தினை நேரு போன்ற பெரும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், லால்பகதூர் சாஸ்திரி, மொரார்சி தேசாய் செகசீகன்ராம், எசு.கே. பட்டேல் போன்றோர் பதவியைத் துறந்து இளைஞர்களிடம் ஒப்படைத்தனர்.
இதனால், கட்சியினரிடமும், தொண்டர்களிடமும், மக்களிடமும் மரியாதைக்குரிய ஒருவராக மாறி, அனைவருக்கும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார். 1964ஆம் ஆண்டு, ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரியை இந்தியப் பிரதமராக முன்மொழிந்தார். பிறகு, 1966ஆம் ஆண்டு திடீரென லால்பதூர் சாஸ்திரி மரணமடைய 48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திரா காந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர்.
வரலாற்றில் அழியாத தலைவன்
சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள், 150 ரூபாய் மட்டுமே.
விருதுநகரில் காமராஜருக்கு கட்டப்பட்ட மணிமண்டபம் இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதமர்களை உருவாக்கி, கிங் மேக்கராகத் திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர், பகைவர்களும் மதிக்கும் பண்பாளராகவும், படிக்காத மேதையாகவும், கல்வியின் நாயகனாகவும், மனிதநேயத்தின் மறு உருவமாகவும் திகழ்ந்தார். ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராக விளங்கிய காமராஜரைப் போல் உன்னதமான, நேர்மையான இன்னொரு தலைவனைத் தமிழ்நாடு சந்திக்குமா என்பது சந்தேகமே? இதையும் படிங்க:மறைக்கப்பட்ட நவீன இந்தியாவின் சாணக்கியர் பி.வி. நரசிம்ம ராவ்