தமிழ்நாட்டில், கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக விவசாய பயிர்கள் கடுமையான சேதமடைந்தன. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, வத்ராயிருப்பு ஆகிய பகுதிகளில் மழை நீரில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன.
பயிர் பாதிப்புகள் குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகநாதன் தலைமையில், டெல்லி உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் அசுதோஷ் அக்னி கோத்ரி, ஹைதராபாத்தில் உள்ள மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் எண்ணெய்வித்து வளர்ச்சி இயக்குநர் மனோகரன் ஆகியோர் இன்று(பிப்.4) விருதுநகரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, அருப்புக்கோட்டை அருகேயுள்ள செங்குளம், கீழ்குடி, மறவர்பெருங்குடி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களையும் பயிர்களையும் மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் எம்.ரெட்டியாபட்டி வேளாண்மை வட்டத்தில் பயிர் சேதம் குறித்த ஆய்வை முடித்துவிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது மறவர்பெருங்குடியில் மத்திய குழுவினர் வந்த வாகனத்தை கிராம மக்கள் தடுத்த நிறுத்தி மனு அளிக்க முயன்றனர். ஆனால், மத்திய குழுவினர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றனர்.