வெடி விபத்து நிகழ்ந்த இடம் சிவகாசி:விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள கிச்சநாயக்கன்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் இதுவரை பாக்கியம்(35), மகாதேவி (50), பஞ்சவர்ணம் (35), பாலமுருகன் (30), தமிழ்ச்செல்வி (55), முனீஸ்வரி (32), தங்கமலை (33), அனிதா (40) மற்றும் குருவம்மாள் (55) ஆகிய 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், ரெட்டியாபட்டி பகுதியில் முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நிகழ்ந்த மற்றொரு வெடி விபத்தில் வேம்பு என்ற தொழிலாளி உடல் கருகி உயிரிழந்தார். இதனால் ஒரே நாளில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பட்டாசு ஆலைகள் வெடி விபத்துகளில் சிக்கிய 5-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு வெடி விபத்து நிகழ்ந்த இரு இடங்களிலும் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், மாரனேரி கிராமம், கிச்சநாயக்கன்பட்டி மற்றும் சிவகாசி வட்டம், மங்களம் கிராமம் ஆகிய இருவேறு இடங்களில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலைகளில் இன்று (17-10-2023) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:“சட்டம் என்பது ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் பொதுவானதுதான்” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை