சுதந்திர காற்றைச் சுவாசிக்க முகக்கவசங்கள் தடையென நினைப்பவர்களுக்கு புதுமையான முறையில் முகக்கவசங்களை தயார் செய்கிறார் நாகராஜ். இரண்டு மடிப்பாக தைக்கப்பட்ட முகக்கவசத்தின் நடுவில், ஐந்து கிராம் அளவில் வெட்டிவேர் நிரப்பி இவர் தயாரிக்கும் மூலிகை முகக்கவசம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
முகக்கவசங்கள்தான் இவரின் முதல் தயாரிப்பா? என கேட்டால் நிச்சயமாக இல்லை. விதைப் பென்சில்கள், காகித பேனா என இயற்கைக்கு ஊறுவிளைவிக்காத பொருள்களை உருவாக்குவதில் நாகராஜ் கெட்டிக்காரர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ், நீண்ட நேரம் முகக்கவசம் அணிபவர்களின் சிரமத்தை சிக்கலில்லாமல் நீக்க முடிவுசெய்தார். அதன் விளைவாக உருவானதுதான் வெட்டிவேர் முகக்கவசம். இந்த முகக்கவசங்களுக்கு பட்டாசு ஆலை தொழிலாளி தொடங்கி காவலர்கள் வரை அனைவரும் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.
இது குறித்து நாகராஜ் கூறுகையில், “சிலருக்கு முகக்கவசம் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. ஆனால் கரோனா நெருக்கடியில் முகக்கவசத்தை அணிவதைத் தவிர்க்கவும் முடியாது. அதைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டதுதான் மூலிகை முகக்கவசம். இதற்காக வெட்டிவேரை பயன்படுத்திவருகிறேன். இதனை நெகிழிக்கு மாற்றான நண்பர்கள் குழு மூலமும், சமூக ஊடகங்கள் வாயிலாக ரூ.25க்கு விற்பனை செய்துவருகிறேன். மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது” என்றார்.