விருதுநகர் மாவட்டம் இராசபாளையம் நகரின் மையப்பகுதியில் செயல்பட்டுவரும் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இராசபாளையம் மற்றும் 30க்கும் மேற்பட்ட அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து தினந்தோறும் கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், குழந்தைகள் என சிகிச்சை பெற 500க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள கால்வாயில் துர்நாற்றம் வீசியும், நோய் பரப்பும் கொசுக்கள், ஈக்களும் காணப்படுவது கர்ப்பிணி தாய்மார்கள், நோயாளிகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கால்வாயில் கழிவுகள் தேங்கி நோய் பரவும் அபாயம் இது குறித்து சிகிக்சை பெற்றுவருபவர்கள் மருத்துவ அலுவலர் மாரியப்பனிடம் புகார் கூறிய போது, நகராட்சித் துறை அலுவலர்களிடம் பலமுறை மருத்துவமனை சார்பில் புகார் அளித்து கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் சுகாதாரக் கேட்டினை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை என தெரிவித்தார். நகரின் மையப்பகுதியில் இயங்கும் அரசு மருத்துவமனைக்கே சுகாதார பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்காத நகராட்சி அலுவலர்களுக்கு இப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்!