விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் விலை வாசி உயர்வு மின்கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிமுகவின் முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும் மேற்கு மாவட்ட செயலாருமான கே.டி.இராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் செல்லூர் கே.ராஜு திண்டுக்கல் சீனிவாசன் நத்தம் விஸ்வநாதன் தளவாய்சுந்தரம் மாஃபா.பாண்டிய ராஜன் கோகுல இந்திரா மணிகண்டன் விஜயபாஸ்கர் கடம்பூர் ராஜூ மற்றும் அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து மேடையில் வைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவ படத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அதிமுகவின் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது.
திராவிட மாடலை உருவாக்கியது அதிமுக:பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்கு அடித்தளம் போட்டது அதிமுக தான் என்றார். மேலும் தமிழ்நாட்டில் திராவிட மாடலை உருவாக்கியது அதிமுக தான் என்றார்.
தமிழ்நாட்டில் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு முடக்கி வைத்து உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதம் காலம் ஆகியும் நீட் தேர்வை ரத்து செய்ய வில்லை என விமர்சனம் செய்த எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டிற்க்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்றார் ஆனால் நீட் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என விமர்சனம் செய்தார்.