விருதுநகர்மாவட்டம், சிவகாசி அருகே தேவர்குளத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ''தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகள் ஆட்சியமைத்துள்ள வரலாற்றைப் பெற்ற கட்சி, அனைத்துந்திய அண்ணா திராவிடர் முன்னேற்றக்கழகம் தான். குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருபவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தான். திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகி விட்டன. இதுவரை, அறிவித்த எந்த திட்டங்களையும் திமுக சரிவர செயல்படுத்தவில்லை.
மூடு விழா நடத்தும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் ஆட்சி உள்ளது.
ஈரோடு தேர்தலில் ஆடு, மாடு தவிர, எல்லாவற்றையும் வாங்கிக்கொடுத்து வெற்றிபெற்றுள்ளார்கள்; திமுக பணம் கொடுத்ததால் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு மக்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளார்கள். ஆனால் உண்மையான வாக்குகளோ வெற்றியோ திராவிட முன்னேற்றக்கழகத்தினருக்கு கிடைக்கவில்லை'' என விமர்சனம் செய்து பேசினார்.
இதைத் தொடர்ந்து, சிவகாசி - தேவர் குளத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் கூறுகையில், ''கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது விருதுநகர் மாவட்டத்தில் 6 தொகுதியில் தோல்வியடைந்தோம். திமுக ஆட்சியில் அமர்ந்துகொண்டு அதிமுகவை எப்படி அழிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறது. தன் மீது பொய் வழக்கு போட்டு விசாரணை என்ற பேரில் அச்சுறுத்தி வருகிறது.
தவறு செய்தால் தண்டனையை அனுபவிக்கத் தயாராக உள்ளேன். நிரபராதி என நிரூபிக்க உண்மையை ஆயுதமாக வைத்துள்ளேன். காலத்தின் சூழ்நிலை காரணமாக காரணமாக தமக்கும் கே.டி. ராஜேந்திரபாலாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த சட்டமன்றத்தேர்தலின் போது எங்களுக்கு ஏழரை சனி பிடித்ததால் விருதுநகர் மாவட்டத்தில் 6 தொகுதியில் தோல்வியடைந்தோம். காலத்தின் விதிப்போக்கால் ராஜபாளையத்தில் போட்டியிட்ட கே.டி.ராஜேந்திரபாலாஜி வரும் சட்டமன்றத்தேர்தலில் சிவகாசியில் போட்டியிட்டு 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. திமுக வெற்றி பெறவில்லை, அதிமுகதான் திமுகவிற்கு ஆட்சியை கையில் கொடுத்தது' என்றார்.
ஈரோட்டில் திமுகவினர் பணம் கொடுத்ததால் மக்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாக்களித்துள்ளனர் - கே.டி.ராஜேந்திர பாலாஜி - ராஜேந்திர பாலாஜி செய்திகள்
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி பணம் கொடுத்ததால் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.
முன்னதாக, ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரின் உதவியாளர்கள், அதிமுக நிர்வாகிகள்மீது கடந்த 2021-ம் ஆண்டு விருதுநகர் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அதையடுத்து, முன் ஜாமீன் கேட்ட மனு, ராஜேந்திர பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர், தலைமறைவாக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜியை, கடந்த 2022 ஜனவரி 5ஆம் தேதி கர்நாடகாவில் இருந்து கைது செய்து அழைத்து வந்தனர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியில் இருக்கிறார்.