விருதுநகர்:அமமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து மரக்கடை பேருந்து நிறுத்தம் எதிரே திறந்த வேனில் நின்றவாறு தொண்டர்களை பார்த்து கையசைத்து வாக்கு சேகரித்தார்.
அப்போது, கட்டை விரலை உயர்த்தி காட்டியும், கையெடுத்து வணங்கியும் முரசு சின்னத்தை கையில் தூக்கி காண்பித்தும் விஜயகாந்த் மக்களிடையே பரப்புரை மேற்கொண்டார். விஜயகாந்தைப் பார்த்த மகிழ்ச்சியில் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் ஆர்வ மிகுதியில் உற்சாகமாகக் கைகளை அசைத்து கரகோஷம் எழுப்பினர்.
அருப்புக்கோட்டையில் வாக்கு சேகரித்த விஜயகாந்த் விஜயகாந்த் ஒருசில வார்த்தையாவது பேசுவார் என தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில் எதுவும் பேசாமல் தொடர்ந்து கைகளை மட்டுமே அசைத்து விட்டு, அங்கிருந்து சிறிது நேரத்திலேயே புறப்பட்டுச் சென்றார்.