விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்து 70 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் உபதொழில்கள் மூலமும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கிவரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.7ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனை நடைபெறுகிறது. ஆனால், கடந்த நான்காண்டுகளாக பட்டாசுத் தொழில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுத் தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்தது. ஆனால் பட்டாசு தயாரிக்க முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் பேரியத்துக்கும், சரவெடி தயாரிப்பதற்கும் தடை விதித்தது. இனி அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் எதிரொலியாக கடந்த தீபாவளிக்குப் பிறகு சிவகாசியில் உள்ள ஆயிரத்து 70 பட்டாசு ஆலைகள் 3 மாதங்கள் மூடப்பட்டன. இதனால் இந்த ஆண்டு 40 சதவீதம் பட்டாசு உற்பத்தி குறைந்துள்ளது. இதுகுறித்து பட்டாசு விற்பனை செய்துவரும் சாந்தி மாரியப்பன் கூறும்போது, கடந்த மூன்று ஆண்டுகளை விட இந்த ஆண்டு 50 சதவீதத்திற்கு குறைவாகவே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், பருவ மழையின் காரணமாக அதிலும் 10 சதவீதம் குறைவு ஏற்பட்டு தற்போது 40 சதவீதம் மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.