விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயில் - குன்னூர் செல்லும் பகுதியில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த முதுமக்கள் தாழியை தொல்லியல் துறை ஆராய்ச்சி முனைவரும் பேராசிரியருமான கந்தசாமி கண்டறிந்துள்ளார்.
இதுகுறித்து பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது, "பழங்காலத்தில் பெருங்கற்காலப் பண்பாடு அல்லது இரும்புக்காலம் என்று அழைக்கப்படும். இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை வளர்ச்சி பெற்றது. பெரிய கற்களைக் கொண்டு இறந்தவர்களின் நினைவாக நினைவுச் சின்னங்களை எழுப்பினர். பெருங்கற்கால சின்னங்களாக கற்பதுக்கை, கல்திட்டை, கல்குவை, கல்வட்டம், குத்துக்கல் மற்றும் முதுமக்கள்தாழி ஆகிய பல்வேறு நிலைகளில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை கடந்த 1500 முதல் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ளது.
தமிழ்நாட்டில் தொல்குடிகள் வாழ்ந்த காலம் பெருங்கற்காலத்தோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இறந்தவர்களின் ஆன்மா அழிவதில்லை என்ற நம்பிக்கையைக் கொண்டு பெருங்கற்காலத்தில் இறந்தவர்களுக்காக நினைவு சின்னங்களை எடுத்தார்கள். ஒரு பகுதியில் ஒரு குழுத்தலைவர் அல்லது மக்கள் கூட்டத்தை சேர்ந்தவர் யாரேனும் உயிர் நீத்தால் அவருடைய ஆன்மா அந்தக் குழு கூட்டத்தையே சுற்றி இருக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர்.
பழங்கால முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு பெருங்கற்கால சின்னங்கள் வளர்ச்சியடைந்த பிறகு முதுமக்கள் தாழிகளாக தோற்றம் பெற்றன. பெருங்கற்கால பண்பாட்டைச் சேர்ந்த இடங்களை தொல்லியல் இடங்களாக தேர்வு செய்யப்பட்டு அவற்றை பாதுகாக்க மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டதை ஆராய்ச்சி இடங்களாக அறிவிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க:அனல்மின் நிலைய நிலக்கரி சாம்பல் கழிவில் மிதக்கும் வடசென்னை - அகதிகள் போல் வாழும் மக்கள்