ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு திருமணமாகி தாமரைச்செல்வி என்ற மனைவியும், விஜய சௌந்தர்யா, விஜய ஷாலினி என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
சிறுவயதில் கிரிக்கெட் விளையாடும்போது காலில் ஏற்பட்ட காயத்தினால் மணிகண்டன் தனது ஒரு காலை இழந்தார். பின்பு ஒரு காலில் சைக்கிள் ஓட்டி பழகியுள்ளார்.
தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
பின்னர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கை முதல் சென்னை வரை ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை இரண்டாம் முறையாக விழிப்புணர்வு சாதனை பயணம் மேற்கொண்டுள்ளார்.
இவ்விரு சாதனைகளிலும் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டுள்ளார்.
'வெற்றிபெறுவேன்' - மணிகண்டன்
மூன்றாவது முறை விழிப்புணர்வு சாதனையாக அவர் தற்போது கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டிவருகிறார். விருதுநகரின் முக்கியச் சாலைகளில் ஒற்றைக் காலோடு சைக்கிள் ஓட்டிவரும் மணிகண்டன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
- நதிநீர் இணைப்பு,
- மழைநீர் சேகரிப்பு,
- மரக்கன்றுகள் நடுதல்,
- நெகிழிப்பொருள் ஒழிப்பு,
- உடல் உறுப்புதானம்,
- இயற்கை விவசாயம்,
- அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்ப்பது,
- தலைக்கவசம் அணிவதன் அவசியம்
உள்ளிட்ட முக்கிய 10 விழிப்புணர்வு பரப்புரை செய்தவாறு மூன்றாவது முறையாகச் சாதனையை தொடர்ந்துள்ளதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
முதலிரண்டு விழிப்புணர்வு சாதனைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்ததுபோல் மூன்றாவது சாதனைப் பயணத்தையும் வெற்றிகரமாக முடிப்பேன் என நம்பிக்கையுடன் கூறுகிறார் மணிகண்டன்.
ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாற்றுத்திறனாளி மேலும், "கன்னியாகுமரியில் தொடங்கிய சாதனைப் பயணம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் வழியாகச் சென்று வருகிற ஜனவரி 1ஆம் தேதி மெரினா கடற்கரையில் வெற்றிகரமாக முடிக்க திட்டமிட்டுள்ளேன்" எனச் சொல்லும் அவரது முகத்தில் மின்னுகிறது மகிழ்ச்சி...!
இதையும் படிங்க: குமரி டூ காஷ்மீர்: கலாசார விழிப்புணர்வு சைக்கிள் பயணம்!