கரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு உத்தரவு மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் அன்றாட வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு பொது மக்களுக்கு நிவாரணமாக 1000 ரூபாயும் அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, பருப்புகள் இலவசமாக வழங்க உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் இன்று (ஏப்ரல் 2) காலை முதல் நிவாரண நிதி, பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து ரேசன் கடைகளிலும் டோக்கன் முறைகள் ஏற்படுத்தியும், பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நிற்பதற்கான ஏற்பாடுகள் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக்கழகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சர்ச் தெரு 17ஆவது வார்டு பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்க நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.