உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வரும், கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதனால் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான கொல்லப்பட்டி, நீராவிபட்டி, போத்திரெட்டிபட்டி, வன்னிமடை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக மழை சரிவர இல்லாத காரணத்தால், நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயம் பாதிப்படைந்தது.
ஆகையால், மாற்றாக விவசாயிகள் வெள்ளரிக்காயை பயிரிட்டனர். மேலும், கோடை காலம் என்பதால் வெள்ளரிக்காய் அறுவடைக்குப் பின்னர் அதிகளவில் விற்பனையாகும் என விவசாயிகள் நம்பிக்கையில் இருந்தனர்.
வாழ்வாதாரம் இன்றி வாடும் வெள்ளரிக்காய் விவசாயிகள் தற்போது கரோனா வைரஸ் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வெள்ளரிக்காயை அறுவடை செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர். வெள்ளரிக்காயை அறுவடை செய்யாததால், காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சில விவசாயிகள் அறுவடை செய்த வெள்ளரிக்காயை விற்பனை செய்ய சந்தைக்கு எடுத்து வந்தாலும் மக்கள் அதிகளவில் வெளியே வராததால் வியாபாரமும் ஏற்படாமல், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஆகவே, வெள்ளரிக்காய் விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கக்கோரி, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'காவல்துறை, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச முகக் கவசம்' - சாய்ராம் அறக்கட்டளை அசத்தல்