விருதுநகர்: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, Barium nitrate இல்லாமல் பட்டாசு தயாரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்தரவை மீறி, Barium Nitrateஐ கொண்டு பட்டாசு தயாரிக்கும் ஆலைகளுக்குச் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளை மூடி வைத்துள்ளனர். இதனால் பட்டாசு தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மனு கொடுக்கும் போராட்டம்
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் சுற்றுப்புறச்சூழல் விதியிலிருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்கக்கோரி வெம்பக்கோட்டை, சாத்தூர், ஏழாயிரம் பண்ணை, தாயில்பட்டி உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளர்கள் வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 1000க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் சாலையோரத்தில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.