விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனை சாவடியில் பணிபுரிந்த காவலர்களுக்கு கரோனா உறுதியானதை அடுத்து, நத்தம்பட்டி காவல் நிலையம் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு பணிபுரிந்து வந்த காவலர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் 5 பேருக்கு கரோனா உறுதியானது.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் உத்தரவின்படி, ஸ்ரீவில்லிபுத்தூரில் பணிபுரியும் அனைத்து காவலர்களும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் மம்சாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பரிசோதனை செய்ததில் இன்று கரோனா உறுதியானது. அதனை தொடர்ந்து மம்சாபுரம் காவல் நிலையமும் மூடப்பட்டது
அதேபோல கடந்த சில நாள்களுக்கு முன்பு சிவகாசி நகர் காவல் நிலைய காவலர் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதே காவல் நிலைய காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் காவல் நிலைய ஆய்வாளருக்கு தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பணிபுரியும் காவலர்களுக்கு அடுத்தடுத்து கரோனா உறுதியான நிலையில், அவர்கள் பணிபுரிந்து வந்த காவல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. சக காவலர்களுக்கு தொடர்ந்து கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது, மாவட்டத்திலுள்ள மற்ற காவலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.