விருதுநகர் மாவட்டத்தில், கரோனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நோய்த் தொற்றுக்குள்ளான பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த 55 வயது பெண், கடந்த வியாழக்கிழமையன்று (ஜூலை 16) ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துள்ளார். பரிசோதனை முடிவில் நோய்த் தொற்று இருப்பது நேற்று(ஜூலை 18) உறுதியானது.
இந்நிலையில், சுகாதாரத்துறையினர் தனியார் கல்லூரியில் சேருமாறு போன் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணை, அவரது தம்பி கரோனா சிகிச்சையளிக்கும் தனியார் கல்லூரிக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு 5 மணி நேரம் காக்க வைக்கப்பட்டு, பின்னர் வீட்டிற்குச் செல்லுங்கள் என்று அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து கரோனா பாதிக்கப்பட்ட பெண் தற்போது வீட்டிலேயே சிகிச்சை இன்றி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது தனக்கு மூச்சு விட முடியவில்லை எனப் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் தனது அக்காவை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.