தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனா கேக், மாஸ்க் பரோட்டா, கரோனா தோசை' - பட்டையைக் கிளப்பும் விருதுநகர் ஹோட்டல்! - கரோனா கேக் விருதுநகர்

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், அரசுடன் ஹோட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்களும் கைகோத்துள்ளனர். அதன்படி, கரோனா கேக், மாஸ்க் பரோட்டா, கரோனா தோசை என மக்களிடையே விழிப்புணர்விலும் களமிறங்கியுள்ளனர்.

corona-cake-mask-parotta-virus-dose-awareness
corona-cake-mask-parotta-virus-dose-awareness

By

Published : Jul 14, 2020, 10:04 PM IST

Updated : Jul 17, 2020, 4:43 PM IST

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்

, என்ற குறளின் வழியே அச்சப்பட வேண்டிய விஷயங்களுக்கு அச்சப்படாமல் இருப்பது அறியாமை என்றும், அச்சப்பட வேண்டிய விஷயங்களுக்கு அச்சப்படுவதே அறிவுடைமை என்றும் வள்ளுவன் உணர்த்துகிறார்.

ஆனால், வள்ளுவன் வாக்கின்படி உலகேயே உலுக்கிவரும் கரோனாவைக் கண்டு நாம் கிஞ்சித்தும் அஞ்சுகிறோமோ? ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது. கரோனாவை எதிர்த்துப் போராட மருந்து இன்றளவும் கண்டறியப்படவில்லை. நம் கண்முன் இருக்கும் ஒரே மருந்து தகுந்த இடைவெளியும் முகக்கவசம் அணிவதுமே.

கரோனாவின் தீவிரத்தை உணர்ந்து ஆரம்பத்தில், அக்கறையுடன் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றிய மக்கள், தற்போது அசட்டையாக வீதியில் உலாவருகின்றனர். இதில் விருதுநகர் மக்களும் விதிவிலக்கல்ல. மாவட்டத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, தற்போதைய மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்து வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் ஒரே காரணம்தான் மக்கள் அனைவரும் கரோனா பாதுகாப்பு முறைகளைக் காற்றில் பறக்கவிட்டது. தகுந்த இடைவெளியைக் கடைப்பிடியுங்கள் என்று அரசும் காவல் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களும் எவ்வளவுதான் காட்டுக் கத்து கத்தினாலும், மக்களிடையே அது எடுபடவில்லை.

இதனைக் கருத்தில்கொண்டு, ”உங்களால விழிப்புணர்வு ஏற்படுத்த முடியலன்னா என்ன? நாங்க பாத்துகிறோம்” என்று களத்தில் இறங்கியிருக்கிறார்கள் ஹோட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள். வருங்காலத்தில் கண்டுபிடிக்கப்படவிருக்கும் தனக்கு எதிரான மருந்தைக் கண்டு கரோனா பதறுகிறதோ, இல்லையோ. இவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருள்களைக் கண்டு நிச்சயம் ஓடிவிடும் போல. அந்தளவுக்கு உணவுப் பொருள்களைக் கொண்டு கரோனாவுக்கே டஃப் கொடுக்கிறார்கள் ஹோட்டல் உரிமையாளர்கள்.

ஆம், மாவட்டத்தில் தொற்று அதிதீவிரமாகப் பரவிவருவதால், எப்படியாவது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவிட வேண்டும் என்ற தன் முனைப்பில், கரோனா தோசை, மாஸ்க் பரோட்டோ, மாஸ்க் அணிந்த கேக் என உணவுப் பொருள்களில் புதுமையைப் புகுத்தி மக்களுக்கு விருந்து படைக்கின்றனர் விருதுநகரிலுள்ள ஹோட்டல்காரர்கள்.

இதுகுறித்து ஹோட்டல் மற்றும் பேக்கரி ஓனர் செல்வத்திடம் கேட்டபோது, “உங்களுக்கே தெரியும் நம்ம மாவட்டத்தில கரோன தீவிரமா பரவிட்டுவருது. இதுக்கெல்லாம் மக்கள் சரியான முறையில மாஸ்க் அணியாததுதான் காரணம். அதனால கரோனாவுக்கு எதிரா மக்கள்ட்ட விழிப்புணர்வ ஏற்படுத்தனும்னு முடிவு பண்ணோம்.

உடனே அதுக்கான வேலையிலையும் நாங்க இறங்குனோம். ஹோட்டல்ல மாஸ்க் பரோட்டோவையும் கரோனா தோசையையும் பேக்கரில கரோனா கேக்கையும் அறிமுகப்படுத்துனோம். இதுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்குறாங்க. இதனால அவங்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுது. கேக்குக்கே மாஸ்க் போடும்போது, நாம மாஸ்க் போடாம இருக்கலாமா? அப்படின்ற எண்ணம் வந்து அவங்க மாஸ்க் போடுறத எங்கள்ட்ட சொல்றாங்க. இது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது” என்றார்.

கரோனா கேக், முகக் கவச பரோட்டா, கோவிட்-19 தோசை

இவற்றை வாங்கி சாப்பிடும் மக்களிடமும் இதுகுறித்து கேட்டோம். அவர்களும் செல்வத்தின் கூற்றையே வழிமொழிகின்றனர். விருதுநகர்வாசியான சுப்பிரமணியன் பேசும்போது, “குழந்தைகளுக்கு கேக் வாங்க இந்தக் கடைக்கு வந்தேன். அப்போதான் இந்த கரோனா கேக்க பாத்தேன். அந்த கேக்குக்கு மாஸ்க் போட்ட மாறி இருந்த டிசைன் எனக்கு வித்தியாசமா தெரிஞ்சது.

உடனே அத போட்டோ எடுத்து, என்னோட குழந்தைங்கட்ட காட்டி, கேக்குக்கே மாஸ்க் போடுறாங்க பாத்தீங்களா, அப்போ நாமளும் மாஸ்க் போடனும்னு சொன்னேன். அத பாத்து பிரமிச்சி போன அவங்க அந்த கேக்க சாப்டனும்னு சொன்னதால, வாங்கிட்டு போய் கொடுத்தேன்.

அத பாத்த உடனே அவங்களுக்கு சந்தோஷம். நாங்களும் இனிமே மாஸ்க் போடுவோம்னு எங்கிட்ட சொன்னாங்க. நாம எவ்ளோ சொல்லியும் கேக்காத குழந்தைங்க கரோனா கேக்க பாத்த உடனே கேட்டுக்கிட்டாங்களேனு எனக்கு ஒரே ஆச்சரியம்” என்றார் மனமகிழ்வோடு.

அரசு, மருத்துவர்கள், காவலர்கள் என யார் கூறியும் கேட்காத மக்கள் தாங்கள் கூறினால் நிச்சயம் கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் களமிறங்கியுள்ள விருதுநகர் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இதையும் படிங்க:மாஸ்க் பரோட்டா 'கரோனா' தோசை - மதுரையை அசத்தும் 'டெம்பிள் சிட்டி'

Last Updated : Jul 17, 2020, 4:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details