விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஆயிரம் கண் மாரியம்மன் கோயில் முன்பு அலங்கார வளைவு கட்டுவதற்காக சமுதாய நிர்வாகிகள் முடிவு செய்து கடந்த பத்து தினங்களுக்கு முன்பு அதற்கான பணியை தொடங்கினர்.
இதற்கு அதே சமுதாயத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று (அக்.6) புளியம்பட்டியில் கோயில் முன்பாக விருதுநகர் பிரதான சாலையில் இரு தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். பிவிசி பைப், கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதில் இருதரப்பினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.