விருதுநகர்:பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தனியார் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'இலங்கையில் ஏற்பட்டு உள்ள விலைவாசி உயர்வைக் கண்டித்தும் அரசை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் கடந்த 10 நாட்களாக மக்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். எந்த வித அரசின் அடக்குமுறைகள் அங்கு வெற்றி பெறவில்லை. இலங்கையில் சிங்களர், தமிழர் எனப் பாகுபாடு இன்றி அனைவரும் ராஜபக்ச குடும்ப அரசைக் கண்டித்துப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
விலைவாசி உயர்வு; நாட்டை சீர்குலைக்கும்: இலங்கையில் நடைபெறும் போராட்டம் போல் இந்தியாவில் நடப்பதற்கு வெகு நாட்கள் ஆகாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாட்டில் விலைவாசி அதிகரித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டு உள்ள விலைவாசியைக் கட்டுபடுத்தி, அத்தியாவசியப் பொருட்கள் நியாயமாக மக்களுக்கு கிடைக்க ஒன்றிய அரசு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. விலைவாசி உயர்வு பிரச்னையைத் திசை திருப்ப மதங்களின் பெயரால் நாடு முழுவதும் கலவரங்களை உருவாக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. இந்த முயற்சி நாட்டையே சீர்குலைக்கும்.
25ஆவது இ.கம்யூனிஸ்ட் மாநாடு:அதேபோல், வருகிற ஆகஸ்ட் 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது. அதில் அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அந்த மாநாட்டில் முக்கிய நிகழ்வாக ஆக.9ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு தினத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு "மோடி அரசே வெளியேறு" என்ற முழக்கத்துடன் பேரணி நடைபெறும்' என்று தெரிவித்துள்ளார்.
அம்பேத்கருடன் மோடியை ஒப்பிடுவதை ஏற்க முடியாது: எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு மக்கள் ஏங்குகிறார்கள் என பாஜக மாநிலத்தலைவர் கூறிய கருத்துக்குப் பதிலளித்த முத்தரசன், எடப்பாடி பழனிசாமியை உளவுத்துறை தேடிக்கொண்டு இருக்கிறது என்றார்.