விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி பஞ்சாயத்துக்குள்பட்ட சண்முகசுந்தர கிராமத்தில் மோட்டார் பழுது மற்றும் பராமரிப்பு இல்லாததால் கடந்த 2 மாதங்களாக அக்கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனை பழுதுபார்ப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யாமல் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அனந்தராமன் உதாசினப்படுத்தியதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக 9ஆவது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் தொலைபேசியின் வாயிலாகத் தொடர்புகொண்டு குடிநீர் பிரச்னை குறித்து பேசியுள்ளார். சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. தண்ணீர் இல்லாமல் சிறுவர் முதல் பெரியவர் வரை கஷ்டப்படுவதாகத் தெரிவித்தார்.