தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஒன்றிய அரசு எந்தவித பாரபட்சமும் காட்டவில்லை...’ - நிர்மலா சீதாராமன் - ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் நிதியில் ஒன்றிய அரசு எந்தவிதமான பாரபட்சமும் காட்டுவதில்லை என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

By

Published : Sep 13, 2021, 3:04 PM IST

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுத்துறைவங்கி அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மான்ராஜ், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக பொதுத்துறை வங்கிகள் மூலம் கடன்பெற்று தொழில் தொடங்கிய தொழில் முனைவோரால் அமைக்கப்பட்ட 23 அரங்குகளைப் பார்வையிட்டார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் தொழில்முனைவோர் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிக்கான காசோலைகளை அவர் வழங்கினார்.

தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து துறை அலுவலர்களுடன் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

பொதுத்துறை வங்கிகள் உடனான ஆய்வுக் கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, “கரோனா காலகட்டத்தில் சிறு, குறு தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டது. அவர்களின் தொழில்கள் முன்னேற்றம் அடைவதற்குத் தேவையான கடன் உதவிகளை ஒன்றிய அரசு வழங்கி வந்தது.

தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவி

அருப்புக்கோட்டையில் தற்போது நடைபெறும் ஆய்வுக் கூட்டம் எதற்காக என்றால் விருதுநகர் மாவட்டத்திலுள்ள மக்களுக்கு வங்கிகள் மூலம் முறையாக கடனுதவிகள் கிடைக்கப் பெற்றதா என்பது குறித்து தான்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர்களுக்கு முன்னேற்றத்திற்காக பல கடன் உதவிகளை ஒன்றிய அரசு அறிவித்தது. அறிவித்ததுடன் மட்டும் நின்று விடாமல் அதனை முறையாக வங்கியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே இந்தக் காலகட்டத்திலும் தொழில் முனைவோர்கள் கைகளில் பணம் இருப்பு உள்ளது.

கரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள அனைவரும் தடுப்பூசிகள் எடுத்துக்கொள்ள வேண்டும், முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும், வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் இவற்றை முறையாக செய்தாலே எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் அனைவரும் பாதுகாப்பாக இருக்கலாம்.

இந்திய நாட்டின் பிரதமரின் திட்டம் என்னவென்றால், அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைவருக்கும் வங்கிகள் மூலம் தேவையான கடன் உதவிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதனை அனைத்து வங்கி அலுவலர்களும் முறையாக செயல்படுத்த வேண்டும் என்பது தான். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு கடன் உதவி வேண்டாம் என்று சொல்லும் வரைக்கும் வங்கி அலுவலர்கள் பொதுமக்களுக்குத் தேவையான அரசின் அனைத்து திட்டங்களையும் வீடு தேடி எடுத்துச் சென்று வழங்க வேண்டும்” என்றார்.

ஓய்வூதியத் திட்டங்கள்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “விருதுநகர் மாவட்டத்துக்கு மூன்றாவது முறையாக ஆய்வு செய்ய நான் வந்துள்ளேன் . இந்த மாவட்டத்திலுள்ள பிரச்சினைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினேன்.

ஒன்றிய அரசின் ஒரு சில திட்டங்களில் இந்த மாவட்டத்திலுள்ள அலுவலர்கள் செயல்படுத்துவதில் பின் தங்கியுள்ளனர். அவற்றை விரைந்து செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளை நான் வழங்கியுள்ளேன். விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதனைப் போக்க வீடுதோறும் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை துரிதப்படுத்த அறிவுறுத்தியுள்ளேன்.

இந்த மாவட்டத்தில் உள்ள கூலித் தொழிலாளர்களில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் ஓய்வூதியத் திட்டங்கள் மூன்று இருந்தாலும் ஒரு திட்டத்தை மட்டுமே அலுவலர்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர். மற்ற திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு, குறு வியாபாரிகள், வாழ்க்கை மேம்படத் தேவையான கடன் உதவிகள் விரைந்து வழங்க வங்கி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன். விருதுநகர் மாவட்டத்திலுள்ள விவசாயிகள், இனாம் திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள பிற மாநிலங்களுக்கு தங்களுடைய விளைபொருள்களை, அன்றைய சந்தை மதிப்பிற்கு ஏற்றவாறு கணினி வாயிலாக விற்பனை செய்யும் இந்தத் திட்டத்தை 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்படுத்த மாவட்ட அலுவ்லர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

சிதம்பரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன்

ஒன்றிய அரசு மீது தற்போது குற்றச்சாட்டை முன்வைக்கிறார் சிதம்பரம். டெல்லி ரயில்வே நிர்வாகம் தனியார்மயமாக்கப்பட்டபோது நிதி அமைச்சராக இருந்து ஒப்புதல் வழங்கிய அவர் தான் தற்போது ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை குத்தகைக்கு விடுவதாக விமர்சனம் செய்து வருகின்றார்.

தூங்குபவர்களை தட்டி எழுப்ப முடியும், ஆனால் தூங்குவது போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது. தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் நிதியில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாகக் கூறுகின்றனர்.

உரிய ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கூறி அதனை சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மோடி தலைமையிலான ஒன்றிய அரசு எந்தவிதமான பாரபட்சம் காட்டப்படுவது இல்லை” என்றார்.

நிர்மலா சீதாராமன் பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டிலுள்ள மற்ற கட்சிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பாஜகவில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகமாக உள்ளது. பட்டாசு உற்பத்திக்கும் விற்பனைக்கும் ஒன்றிய அரசு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை.

ஒரு சில மாநிலங்களில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளால் பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனை சரிசெய்ய எங்களை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் நாடினால் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: வருமான வரி தளத்தில் தொடர் தொழில்நுட்பக் கோளாறு: நிதி அமைச்சரிடம் விளக்கம் அளிக்க உள்ள இன்ஃபோசிஸ் சிஇஓ

ABOUT THE AUTHOR

...view details