விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலை செல்லும் அய்யனார் கோவில் சாலையில் ஆறாவது மைல் நீர்த்தேக்கம் அருகே கலாராணி என்பவருக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் தோப்பு உள்ளது.
இந்தத் தோப்பில் இவர்கள் ராஜபாளையம் நாட்டு இன நாய், நாட்டுக்கோழி, மாடு ஆகியவற்றை வளர்த்து வருகின்றனர். இவர்களுடைய சினை எருமை மாடு ஒன்று வழக்கம் போல அந்தப் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள், வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை பழங்களுக்கு இடையே வைத்துள்ளனர். இதனை அறியாத எருமைமாடு அந்தப் பழத்தை சாப்பிட்டுள்ளது. இதையடுத்து பழம் வெடித்து சிதறியதில் எருமைமாட்டின் வாய் தாடைகள் சிதறியது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அம்மாடு போராடி வருகிறது.
பழத்தில் நாட்டு வெடிகுண்டு: மனித நேயமற்ற செயலால் உயிருக்கு போராடிவரும் எருமைமாடு
விருதுநகர்: ராஜபாளையத்தில் வேட்டையாட வெடி வைக்கப்பட்டிருந்த பழத்தை உண்ட எருமைமாடு வெடி வெடித்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது.
விலங்குகளை வேட்டையாடுவதற்காக வெடி வைக்கப்பட்டதா அல்லது வேறு ஏதும் சட்டவிரோத செயலுக்காக நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து கலாராணி கூறுகையில்," இதேபோல் கடந்த பத்து நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் மற்றொரு மாடு நாட்டு வெடிகுண்டை சாப்பிட்டு உயிரிழந்ததாகக் கூறுகின்றனர். இந்தப் பகுதியில் நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த காவல்துறை, வனத்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் நீடித்தால் மனிதர்கள் நாட்டு வெடிகுண்டுக்கு உயிரிழக்கும் ஆபத்தும் உள்ளது. அதற்கு முன்பாக நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தும் நபர்களை கைது செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:தோட்டத்தில் மேய்ந்த எருமைக் கன்றை மரத்தில் தொங்கவிட்டு கொன்ற நில உரிமையாளர்!