விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கீழ்க்கண்ட மங்கலத்தைச் சேர்ந்த வீரபாண்டி, சந்திரமதி தம்பதி இவர்களுக்கு சண்முகவடிவு, விஜயா, அமசவள்ளி என்ற மூன்று மகள்களும், கணேஷ் பாபு என்ற மகனும் உள்ளனர்.
இவர்களின் கடைசி மகளான அம்சவள்ளி ராஜபாளையத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய அண்ணன் கணேஷ் பாபு லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அம்சவள்ளியும், அதே ஊரைச் சேர்ந்த முருகேசபாண்டி என்பவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இரு குடும்பத்திற்கும் தெரியவந்ததால் திருமணம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்தத் திருமணத்திற்கு கணேஷ்பாபு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவினால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மதுக்கடை மூடியிருந்ததால் அமைதியாக இருந்த கணேஷ் பாபு நேற்று மது அருந்திவிட்டு மது போதையில் தங்கை அம்சவள்ளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கணேஷ் பாபு அருகிலிருந்த கட்டையால் தங்கை அம்சவள்ளியைக் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் அம்சவள்ளி பரிதாபமாக உயிரிழந்தார். தங்கையை கொலை செய்து விட்டு கணேஷ் பாபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் திருச்சுழி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: திருமழிசை மார்க்கெட் 9ஆம் தேதி முதல் திறப்பு: ஆட்சியர் தகவல்