விருதுநகர்:விருதுநகரில் 22 வயது இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் செய்த சம்பவத்தைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டும் பாஜக சார்பில் விருதுநகர் எம்.ஜி.ஆர். சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில்,
“தமிழ்நாட்டில் பாலியல் தொல்லை என்பது தினமும் அதிகரிக்கிறது. நிர்பயா வழக்கு போல் தமிழ்நாட்டில் நடந்து இருப்பது கொடுமையான விஷயம் ஆகும். அதே போல் தமிழ்நாடு காவல்துறையினர் ஆளும் கட்சியினர் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வந்து சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் பெண் காவலர்களைக் கொண்டு பெண்கள் பாதுகாப்பு மாதம் என்ற திட்டத்தை அறிவிக்க வேண்டும். அந்த மாதத்தில் பெண்கள் சம்பந்தமான வழக்குகளை மட்டும் விசாரிக்க வேண்டும்’ எனவும் தமிழ்நாடு காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் அவர், ‘விருதுநகர் 22 வயது இளம் பெண் பாலியல் வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் வழக்கு சென்று உள்ளது. அதே நேரத்தில் சிபிசிஐடி காவல்துறை மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்குமா? என்பது தெரியவில்லை. விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் சிபிசிஐடியின் செயல்பாடுகளைப் பார்த்து விட்டுத்தான் பாஜகவின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்’ என அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கு அனுமதிக்க வேண்டும்
விருதுநகரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்- பட்டியலின பெண்ணை வன்முறை செய்ததை கண்டித்து போராட்டம் ’தமிழ்நாட்டில் உள்ள பனை மரங்களைப் பாதுகாக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கு அனுமதிக்க வேண்டும். கள் இறக்க அனுமதி கொடுத்தால் தமிழ்நாட்டில் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் நடத்தும் சாராய ஆலைகள் நஷ்டம் ஏற்படும் என்பதால் தான் கள் இறக்க அனுமதி மறுக்கப்படுகிறது’ என அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
’பெட்ரோல் விலையைக் குறைக்க எத்தனால் கலக்க வேண்டும். பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பது என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. 100% எத்தனால் பெட்ரோல் மூலம் இருசக்கர வாகனத்தை ஓட்ட முடியுமா என்ற சோதனை இந்தியாவில் தற்போது நடைபெறுகிறது. முழுமையாக எத்தனால் கலந்த பெட்ரோல் வரும்போது பெட்ரோல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார். மேலும் மத்திய அரசு பெட்ரோல் விலையைக் குறைக்க முயற்சி எடுத்து வருகிறது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை.. நீர்மட்டத்தை 140 அடியாக குறைக்க கேரளா திட்டம்!