விருதுநகரில் பாரதிய ஜனதா கட்சி, பாரத பண்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெற்ற பாரத மாதா சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், 'பாஜகவில் புதிய மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முருகன் தலைமையில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம். அனைத்துக் கட்சிகளும் வாக்குகளைப் பெறுவதற்காகத் தான் தலைவர்களை நியமனம் செய்வார்கள்.
ஆனால், பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முருகன் முழு தகுதி வாய்ந்தவர். திறமை வாய்ந்தவர். ஆனால், பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளில் கூட தலைவராக இல்லாத நிலையில், சமூக நீதியைக் காக்கும் வேலையை பாஜக செய்துள்ளது. இரண்டாவது முறையாக பாரதிய ஜனதா கட்சியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர் சாதியினர் மட்டும்தான் பாஜகவில் வளரமுடியும் என எதிர்க்கட்சிகள் இதுவரை செய்த பரப்புரைகள் அனைத்தும் பொய்யாகி விட்டன.
காஞ்சி சங்கர மடத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தலைவராக வர முடியுமா எனக்கேட்ட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, தாழ்த்தப்பட்டவர்கள் திமுகவின் தலைவராக வர முடியுமா என கேள்வி எழுப்புகிறோம். மனதில் பட்டதைச் சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் கருத்து பாஜகவுக்கு புதிதல்ல. பாஜகவிற்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை உள்ளது. ஆனால் ரஜினிகாந்த் யாருக்கு இதைச் சொல்லியிருக்கிறார் என்று தெரியவில்லை.