தமிழ்நாட்டிற்கு 'மெட்ராஸ்' மாகாணம் என்ற பெயரை நீக்கிவிட்டு ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் பிறந்தநாள் விழா விருதுநகரில் கொண்டாடப்பட்டது. விருதுநகர் அருகேயுள்ள சூலக்கரை மேடு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி - வள்ளியம்மை தம்பதிக்கு 1985ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி மகனாகப் பிறந்தவர் சங்கரலிங்கனார்.
சிறுவயதிலிருந்தே தமிழ்ப் பற்றும், நாட்டுப் பற்றும் கொண்ட சங்கரலிங்கனார், கதர் ஆடைகளை மட்டுமே உடுத்துவதில் தீவிரம் கொண்டிருந்தார். ராஜாஜி தொடங்கிய காந்தி ஆசிரமத்தில் தங்கியிருந்து பணியாற்றினார். 1927ஆம் ஆண்டு மகாத்மா காந்தி விருதுநகர் வந்தபோது அவருக்கு உதவியாக பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து 1933ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புக்காக நடை பயணம் மேற்கொண்டபோதும் விருதுநகர் வந்த மகாத்மா காந்திக்கு உறுதுணையாக இருந்தவர் சங்கரலிங்கனார். விடுதலைக்குப் பின்னரும் பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சங்கரலிங்கனார், தமிழ் மொழியின் மீது தீராத காதல் கொண்டவராக விளங்கினார். அதன் விளைவாக, சென்னை ராஜ்ஜியம் என்றிருந்த பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
தியாகி சங்கரலிங்கனார் பிறந்தநாள் விழா இந்நிலையில், குடியரசுத் தலைவர், ஆளுநர் பதவிகளை ஒழிக்க வேண்டும், தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளுக்காக 1957ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி விருதுநகர் தேசபந்து திடலிலும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி 76ஆவது நாளான 1957 அக்டோபரில் தியாகி சங்கரலிங்கனார் உயிர்துறந்தார். தமிழ்நாடு அரசு சார்பில் தியாகி சங்கரலிங்கனாருக்கு விருதுநகர் கல்லூரி சாலையில் 1.6 கோடி ரூபாயில் மணிமண்டபம் கட்டப்பட்டது. அவரது பிறந்தநாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இரா. கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: 'குடிக்கத் தண்ணீர் இல்லை... தண்ணீர் கேட்டா அசிங்கமா திட்டுறாங்க'