விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர பாரதி(39). இவருக்கு காரியனேந்தல் கிராமத்தில் சொந்த வீடு உள்ளது. அங்கு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருள்களை பதுக்கிவைத்து, அதிக விலைக்கு சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக மல்லாங்கிணறு காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இத்தகவலின் அடிப்படையில் மல்லாங்கிணறு காவல் சார்பு ஆய்வாளர் சஜீவ் தலைமையிலான காவல்துறையினர், சுந்தர பாரதி வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது மூட்டை மூட்டையாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 லட்சத்து 58 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை கைப்பற்றினர்.