தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Audio Leak: சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்க அமைச்சரின் உதவியாளர் ரூ.1 லட்சம் பெற்றாரா? - making crackers illegally

சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த ஆலை உரிமையாளரை காப்பாற்ற வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சரின் உதவியாளர் லஞ்சம் பெற்றதாக சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 19, 2023, 9:54 AM IST

சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்க அமைச்சரின் உதவியாளர் ரூ.1 லட்சம் பெற்றாரா?

விருதுநகர்:வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் உதவியாளர்,விருதுநகரில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட பட்டாசு ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக ஆலை உரிமையாளர், மற்றொருவரிடம் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

விருதுநகர் அருகே பட்டம்புதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சிவராஜ் பைரோடெக் எனும் பட்டாசு தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சட்ட விரோதமாக விதிகளை மீறி, பட்டாசு தயாரிக்கப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் அந்த ஆலையில் தயாரிப்பு உரிமம் அல்லாத பேன்சி ரக பட்டாசுகள் பாதுகாப்பற்ற முறையில் சட்ட விரோதமாக தகர செட் அமைத்து தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜமாணிக்கம் மற்றும் ஆலை போர் மேன் உட்பட ஆறு பேர் மீது சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, பட்டாசு உரிமையாளர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த ஆலைக்கான உரிமம் மாவட்ட நிர்வாகத்தால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜமாணிக்கம் தன் மீது இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அமைச்சர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் உதவியாளரிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒரு லட்சம் ரூபாயையும் வாங்கிக் கொண்டு, தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தன்னை சிறையில் அடைக்க இருப்பதாகக் கூறி பட்டாசு ஆலை உரிமையாளர், வேறு ஒருவரிடம் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த ஆடியோவில், “என்ன அண்ணே ஒரு லட்ச ரூபாயை வாங்கி கொடுத்துட்டு, ஜட்ஜ் கிட்ட கூட்டிட்டு போய் உள்ள தள்ளுறாங்க என்னைய.. ஒரு லட்ச ரூபாய் வாங்கிட்டாங்க கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர், பி.ஏ. கேட்டதா சொல்லி வாங்கிட்டு கடைசில நான் சொல்லலை. நீ சொல்லலன்னுட்டாங்க. இப்போ ஜட்ஜ் கிட்ட கூட்டிட்டு போய்ட்டு இருக்காங்க என்னைய. உள்ள தள்ளிருவாங்க இப்போ. எனக்கு படபடன்னு வருது. இப்போ அருப்புக்கோட்டை ரூட்ல ஜட்ஜ் வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டு இருக்காங்க” என பேசுகிறார்.

அதற்கு மறுமுனையில் இருந்த நபர், “ஒரு லட்ச ரூபாய் வாங்கிட்டு போய்ட்டாங்கன்னு சொல்லுறீங்க.. இருங்க இப்போ உடனே பேசுறேன்” என சொல்கிறார். அத்துடன் அந்த உரையாடல் முடிவடைகிறது. விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பட்டாசு ஆலை வெடி விபத்தினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் நபர்களிடமிருந்து அமைச்சரின் உதவியாளர் பணம் பெற்றாரா? அல்லது அமைச்சர் உதவியாளரின் பெயரைச் சொல்லி பணம் பெற்று மோசடி செய்த நபர்கள் யார்? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பொருநை அருங்காட்சியகம் பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

ABOUT THE AUTHOR

...view details